ராமபிரானுக்கு அருளிய ஈசன்!

கயத்தாறு! வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவிடத்தால் புகழ் சுமக்கும் ஊர். திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த ஊரின் மற்றொரு சிறப்பம்சம்... சுமார் 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீகோதண்டராமேஸ்வரர் திருக்கோயில்!
ஆம், 'திருவாறைத் தலம்' என்று ஸ்கந்த புராணம் போற்றும் கயத்தாறு... ஸ்ரீராமன் கோதண்டம் (வில்) பெற்ற திருத்தலமாம்! அது என்ன கதை?

திரேதா யுகம்! சீதாதேவியைப் பிரிந்த ஸ்ரீராமன், அவளைத் தேடி தென் திசை நோக்கிப் பயணித்தார். வழியில் இந்தத் தலத்தில் சிறிது நாட்கள் தங்கியிருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டார்.

இதனால் மகிழ்ந்த சிவபெருமான், ஸ்ரீராமனுக்குக் காட்சி கொடுத்ததுடன், கோதண்டம் எனும் வில்லையும் தந்தருளினாராம். எனவே இங்குள்ள இறைவனுக்கு, ஸ்ரீகோதண்டராமேஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் சொல்கிறது. ஸ்வாமி சந்நிதி மகாமண்டபத் தூண் ஒன்றில் சிவபூஜை செய்யும் ஸ்ரீராமனின் சிற்பத்தைக் காணலாம்.

பாண்டிய மன்னன் ஒருவனுக்கும் ஸ்ரீகோதண்டராமேஸ்வரர் அருள் புரிந்த கதை உண்டு.

தாமிரபரணியின் தென் கரையில் இருந்த மணப்படை வீடு எனும் பட்டணத்தை ஆட்சி செய்தவன் ராஜசேகர பாண்டியன். இந்த மன்னன், தனது பட்டத்து யானையில்

ஏறி மதுரைக்குச் சென்று மீனாட்சி- சுந்தரேஸ்வரரை தரிசித்து வருவது வழக்கம். காலப்போக்கில், தள்ளாமையின் காரணமாக மதுரைக்குப் போக முடியாமல் தவித்த மன்னன், ''இறைவா, உன்னை தரிசிக்க முடியாமல் போய் விட்டதே!'' என்று ஈசனிடம் முறையிட்டான். அவனுக்கு அருள் புரிய சித்தம் கொண்டார் சிவனார்.

ஒரு நாள், அசரீரியாக அவனுக்கு அருள் பாலித்தார் இறைவன்: 'மதுரைக்கு வரவேண்டும் என்பதில்லை. அருகிலேயே திருஆறைத் தலத்தில் குடிகொண்டிருக்கும் என்னை தரிசித்தால் போதும்!'

- இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்தான் மன்னன். அனுதினமும் திருஆறை (கயத்தாறு) தலத்துக்கு வந்து

இறைவனை வழிபட்டான்.அத்துடன், இந்தக் கோயிலுக்குப் பல திருப்பணிகளும் செய்தானாம்!

இனி, திருக்கோயிலை தரிசிப்போமா?

பாண்டிய மன்னர்களால் கட்டப் பட்டு, பின் நாயக்க மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்ட இந்த ஆலயம் கிழக்கு நோக்கியது. சுமார் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கிழக்கு வாயிலின் எதிரில் வற்றாமல் ஓடுகிறது கஜத்தாறு (யானை நதி). கங்கைக்கு நிகரான இந்த புனித நதி- தட்சிணவாகினி (தெற்கு நோக்கிப் பாய்வது); ஸ்ரீராமனால் உருவாக்கப்பட்டது என்பர். இதன் பெயரே ஊர்ப் பெயராகவும் அமைந்து, பின்னர் கயத்தாறு என்று மருவியதாகச் சொல்கிறார்கள்.

இங்கு, தெற்கு வாயிலே பிரதானம். நாம் கிழக்கு வாயிலின் வழியே நுழைகிறோம். ஒரே பிராகாரம். தெற்குச் சுற்றில் அறுபத்துமூவர், ஸ்ரீவிநாயகர் ஆகியோரை தரிசிக்கலாம். மேற்குப் பிராகாரத்தில் சுமார் ஆறடி உயரத்தில் கருங்கல்லால் ஆன ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜர் விக்கிரகம். காரைக்கால் அம்மையார் காண, பதஞ்சலி

முனிவர் பாட்டிசைக்க ஆனந்த நடனம் புரியும் கோலத்தில் உள்ள இந்த மூர்த்தியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு!

வடக்குச் சுற்றுக்குத் திரும்பும் இடத்தில் வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீமுருகப் பெருமான் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். வடக்குச் சுற்றில்- தெற்கு நோக்கிய தனிச் சந்நிதியில், காக வாகனத்துடன் ஆவுடையார் மேல் காட்சி தரும் ஸ்ரீசனீஸ்வரர், விசேஷமானவர். தொடர்ந்து 9 சனிக்கிழமை இங்கு வந்து இந்த சனீஸ்வரரை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

கருவறையில், கிழக்கு நோக்கி லிங்கத் திருமேனி யராக அருள் பாலிக்கிறார் ஸ்ரீகோதண்டராமேஸ்வரர். சித்திரை மாதப் பிறப்பு அன்று சூரியக் கதிர்கள், இவரின் திருமேனியைத் தழுவி வழிபடுவது கண்கொள்ளாக் காட்சி! அடுத்து, தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி. ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்துடன், நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழ காட்சி தருகிறாள் அம்பிகை. இந்த தேவியை பிரார்த்தித்து வலம் வந்து வணங்கினால், திருமணம் எளிதில் கைகூடுமாம்!

இந்த ஊரை சுற்றியுள்ள சுமார் 60 கிராமங்களைச் சேர்ந்தவர்கள், இந்த அம்பாளின் சந்நிதி முன் வைத்தே மங்கல நாண் பூட்டும் வைபவத்தை நடத்துகிறார்கள்.

நவக்கிரகங்களும் இங்கு தனித்தனியே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். கோயிலின் வடதிசையில், ஆற்றங்கரை யில் அமைந்துள்ள சாஸ்தாவை வணங்கி திருத்தல வலத்தை நிறைவு செய்கிறோம்.

நவக்கிரக தோஷ பரிகாரம், திருமண வரம் ஆகியவற்றை அருளும் இந்தக் கோயிலில், சித்திரை விஷுவின்போது, பத்து நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. நவராத்திரி போன்ற வைபவங்களும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

சுமார் 100 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடை பெறாமல் இருந்த இந்தக் கோயிலில், பக்தர்களது முயற்சியால் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

_ அ.இரா. நீலகண்டன்

  • Spread The Love
  • Digg This Post
  • Tweet This Post
  • Stumble This Post
  • Submit This Post To Delicious
  • Submit This Post To Reddit
  • Facebook
 
Converted by Ritesh Sanap | Sponsored by Downloaddeck.com Powered by Giant Themes